தென்னை மரம் தோன்றிய வரலாறு
தென்னை ஒரு சீர்மிகு மரப்பயிர், கலியுகத்தின் கற்பகத்தரு. மனித
வாழ்க்கைக்கு தேவைப்படும் ஏராளமான பொருட்களைத் தரும் மரம் என்பதால் இது வாழ்வு தரும்
மரம் என்று எல்லோராலும் பாராட்டப்படுகிறது. தென்னை, அரிக்கேசியே எனப்படம் தாவரக் குடும்பத்தில்
கோக்கோஸ் என்ற பெரும் பிரிவில் உள்ள நூஸிபெரா என்ற சிற்றினத்தை சேர்ந்த தாவரமாகும்.
தென்னையின் தாவரவியல் பெயர் கோக்கோஸ் நூஸிபெரா என்பதாகும். இந்த பெயரை சூட்டியவர் கார்ல்
லின்னேயஸ் என்ற தாவரவியல் அறிஞராவார். கோக்கோஸ் என்றால் ஸ்பானிஸ் மொழியில் குரங்குமுகம்
என்று பொருள். நூஸிபெரா என்றால் காய்க்கின்ற மரம் என்று பொருள். தென் அமெரிக்காவில்
முதன் முதலாக கப்பலில் வந்து இறங்கிய ஸ்பெயின் நாட்டவர்கள் அங்கு தென்னை மரத்தையும்
அதில் காய்த்து தொங்கின தேங்காய்களையும் கண்டார்கள். மூன்று கண்களைக் கொண்ட உரித்த
தேங்காய் அவர்களுக்கு குரங்கின் முகத்தை போன்று தெரிந்தது. எனவே அவர்கள் தேங்காய்க்கு
கோக்கோஸ் என்று பெயரிட்டார்கள். அதன்அடிப்படையில் தென்னை மரத்திற்கு கோக்கோஸ் நூஸிபெரா
என்று பெயரிடப்பட்டது.
தென்னையின் தோற்றமும், பரவலும்:
தென்னையின் பிறப்பிடம் எது என்பது நீண்ட காலமாக விவாதத்திற்குரியதாக
இருந்து வந்தது. ஒருசாரார் இவற்றின் பிறப்பிடம் தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில்
உள்ள ஆண்டிஸ் பள்ளதாக்கு என்றனர். வேறொரு சாரார் தென் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள
பாலினேசியத் தீவுகள் என்றனர். ஆனால் அண்மைக்கால ஆய்வுகளின் படி தென்னையின் பிறப்பிடம்
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலேசியா என்று திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. அங்கு தென்னை
நன்கு வளர்வதற்கு தேவையான பருவநிலை, மழைப்பொழிவு மற்றும் மண்வளம் ஆகியவை நல்ல முறையில்
காணப்படுவதாக கண்டறியப்பட்டது. மேலும் தென்னை இனத்தை சார்ந்த வேறுபல தாவரங்களும் அதிகளவில்
அங்கு காணப்படுகின்றன. ஆரம்பக் காலத்தில் காய்த்த தேங்காய்களின் நார்ப்பகுதி பெரியதாகவும்
சிரட்டையுடன் கூடிய பருப்புப் பகுதி சிறியதாகவும் இருந்திருக்கின்றன. அத்தகையத் தேங்காய்கள்
கடலில் மிதந்து, தொலைதூர இடங்களைச் சென்றடைந்தன. அதன் காரணமாக தேங்காய்க்கு- “கடலில்
பயணிக்கும் காய்” என்ற பட்டப் பெயரும் சூட்டப்பட்டது.
110 நாட்கள் வரை கடலின் உப்பு நீரில் கிடந்த தேங்காய்களாலும்
கூட நன்றாக முளைத்து வளரமுடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 110 நாட்களில் தேங்காய்
சுமார் 5000 கிலோமீட்டர் தூரம் வரையில் கடலில் மிதந்து செல்லக்கூடியது என்று தெரியவந்துள்ளது.
இதன் மூலம் தேங்காய்கள் கடலில் மிதந்து சென்று உலகின் பலப்பகுதிகளுக்கு பரவியிருக்க
கூடும் என்று ஆணித்தரமாக நம்பப்படுகிறது. இருப்பினும் தென்னையை உலகெங்கும் பரவசெய்வதற்கு
மனிதன் ஆற்றியப் பணி மிகவும் அதிகமாகும் என்பதை மறுக்க முடியாது.
மலேசியாவில் பிறந்து வளர்ந்த தென்னையில் இருந்து விழுந்த முற்றின தேங்காய் நெற்றுகள் கடலில் மிதந்து சென்று அந்தமான் & நிக்கோபார் தீவுகளை அடைந்து, அங்குள்ள கடற்கரைப் பகுதியில் முளைத்து வளர்ந்திருக்கின்றன. இன்றுகூட நிக்கோபார் தீவுகளில் தென்னைகள் அதிகளவில் காடுபோல் வளர்ந்து இருப்பதைக் காணமுடியும். அவைகள் யாவும் தன்னிச்சையாக வளர்ந்த தென்னைகள் ஆகும். மனித நடமாட்டம் இல்லாத தெற்கு சென்டினல் தீவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதை இன்றும் காணமுடிகிறது. மனித முயற்ச்சியில்லாமல் தென்னை தன்னிச்சையாக வளரக்கூடியது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள தென்னைகளிலிருந்து விழுந்த தேங்காய் நெற்றுகள் கடலில் மிதந்து சென்று இந்தியாவின் கிழக்குக் கடற்க்கரையில் ஒதுங்கியதாகவும் அவை ஒடிசா மற்றும் ஆந்திர கடற்க்கரையில் முளைத்து தென்னைகளாக வளர்ந்தன என்றும், அங்கிருந்து மேற்கு கடற்க்கரைக்கு சென்றதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றன. அந்தமான் & நிக்கோபார் தீவுகளிலிருந்து கடலில் விழுந்த தேங்காய் நெற்றுகளின் ஒருப்பகுதி இலங்கைக் கடற்கரையில் ஒதுங்கியதாகவும், அவைகள் அங்கு முளைத்து தன்னிச்சையாக காட்டுமரங்களை போல வளர்ந்தன என்றும் கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்ட அரசன் ஒருவன் தொழுநோயால் பிடிக்கப்பட்டு இருந்தான். இலங்கையின் தெற்கு கடற்கரை பகுதியில் காட்டு மரங்களைப் போல் வளர்ந்திருந்த தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களை பறித்து வந்து, அவற்றிலிருந்து எண்ணெயை பிழிந்து, அவனது உடல்மேல் தடவியபோது, நல்ல குணமடைந்தான். அதை தெரிந்துக் கொண்ட அரசன் தனது குடிமக்களை தென்னை மரங்களை பயிரிடுமாறு பணித்தான். இவ்வாறு இலங்கையில் தென்னை சாகுபடி தொடங்கப்பட்டது. பின்னர் அந்த அரசப்பரம்பரையில் வந்த ஒருவர் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்த அன்றைய மலபார் நாட்டுக்கு வருகை புரிந்தார். அப்போது மலபார் கடற்கரைப்பகுதி தென்னை சாகுபடிக்கு ஏற்றது என்பதை கண்டறிந்த அவர், மலபார் நாட்டு அரசனின் அனுமதியை பெற்று அங்கு ஒரு பெரிய தென்னந்தோப்பை உருவாக்கினார். அவற்றை பராமரிக்க நான்கு சிங்கள தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அந்த சிங்களர்கள் மூலம் தென்னை சாகுபடி பற்றி தெரிந்து கொண்ட மலபார் விவசாயிகள் தங்களது நிலத்திலும் தென்னையை முறையாக பயிரிட தொடங்கினார்.
Post a Comment