தென்னை செய்த பண்பாட்டுப் புரட்சி:
கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் இந்து மதம் உயர்வு பெறுவதற்கு தேங்காய் பெரிதும் உதவியது என்று மாபெரும் வரலாற்று அறிஞர் டி.டி.கே.சாம்பி கூறியுள்ளார். ஆரம்பக்காலத்தில் இந்துமத தெய்வ வழிபாடுகளின் போது நரபலி நடத்தப்பட்டது. கூடவே ஆடு, மாடு, கோழி பலிகளும் நடத்தப்பட்டது. சாதவாகன மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் புத்த மதக்கருத்துக்கள் இந்துக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவாக தெய்வ வழிபாடுகளில் யாகபலிகள் நிறுத்தப்பட்டன. அப்போது யாகபலி கொடுப்பதற்கு மாற்றுப் பொருள் தேவைப்பட்டது. தேங்காயில் இருந்த கண்கள், மூக்கு, குடுமி எல்லாம் மனித முகம் போல் தோற்றமளித்தது. மனித தலைக்கும் தேங்காய்க்கும் இருந்த உருவ ஒற்றுமையைக் கண்ட அந்தணர்கள் யாக பலிக்கு தேங்காய்களை நல்லதொரு மாற்றாகப் பயன்படுத்தினார்கள். அதன் விளைவாக ஆடு, மாடு பலிகள் நிறுத்தப்பட்டன. இவ்வாறாக மேழிச் செல்வங்களின் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டதால், மேழிச் செல்வங்கள் பல்கிப் பெருகின. இதன் விளைவாக வேளாண் உற்பத்தியும் பெருகியது. இவ்வாறு ஒரு புதிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தேங்காய்க்கும் அதைத் தரும் தென்னை மரத்திற்குமே உரித்தாகும்.
தென்னையும் மனித நாகரிக வளர்ச்சியும்:
சாதவாகன மன்னர்கள் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் அழிக்கப்பட்டு அங்கு தென்னை சாகுபடி செய்யப்பட்டது. அதன் விளைவாக தேங்காய் ஒரு முக்கிய வணிக பொருளாக மாறியது. சாதவாகன வணிகர்கள் கோவேரிக் கழுதைகளின் மேல் தேங்கயாய்களை ஏற்றிக் கொண்டு தக்காணபீடபூமி கிராமங்களுக்கு சென்று பண்டமாற்று வியாபாரம் செய்துள்ளனர். பின்னர் தேங்காய்களை தூர தேசங்களுக்கும் ஏற்றுமதி செய்துள்ளனர். இவ்வாறாக தேங்காய்கள் மூலம் சரக்கு வணிகம் வளர்ச்சி பெற்று முதலாம் நூற்றாண்டு நகரங்கள் தோன்றின. பின்னர் மனித நாகரீகம் வளர்ச்சிப் பெற்றது. இவ்வாறாக மனித நாகரீகமும், நகரங்களும் நல்ல முறையில் வளர்ச்சி பெறுவதற்கும் தென்னை மரம் பெரிதும் உதவியுள்ளது. தென்னைக்கான சுற்றுப்புற சூழல் பூமத்திய ரேகைக்கு வடக்கிலும், தெற்கிலும் 23 பாகைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நாடுகளில்தான் தென்னை சாகுபடி பெருமளவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிக்கு வெளியேயுள்ள இடங்களில் தென்னை வளர்ந்தாலும் காய்பிடிப்புத் திறன் குறைவாகவும், அவற்றின் காய்கள் சிறுத்தும் காணப்படுகின்றன. உதாரணமாக, வட அமெரிக்காவில் ஃபுளோரிடா கடற்கரையில் (25 டிகிரி வடக்கு) வளர்க்கப்பட்டுள்ள தென்னைகள் சரிவரக் காய்ப்பதில்லை. அங்கு தென்னைகள் கடற்கரைக்கு அழகு ஊட்டும் மரங்களாக மட்டுமே வளர்ப்படுகின்றன. நமது நாட்டில் கூட உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் (26.4 டிகிரி வடக்கு) தென்னை வளர்ந்தாலும் அவைகள் சரிவர காய்ப்பதில்லை.
Post a Comment